யட்சினி டிஜிட்டல் ஓவியம்/வரைந்தவர் கவிஞர் |
யட்சினியை யாரும் கேட்டதுண்டோ பார்த்ததுண்டோ
என் பேய்க்கவிதை ஒன்றினில்
வந்து சேர்ந்தாள் தாமதமாக
பருத்த முலைகளும் செழித்த தொடைகளும்
விரித்த கூந்தலும் மோகன சொரூபமென
சிறுத்த இடையொடு
எங்கும் தோன்றினாள்
எதிலும் தோன்றினாள்
எந்தன் யட்சினி
கணிணி திரை பிம்பமோ
அகலத் திரை மயக்கமோ
போல இல்லை
எனச் சொல்ல இல்லை
என் கோரப் பல்லழகி
ரத்த காட்டேரி எந்திர சொரூபினி
மின்னல் வாகினி மிளா விழுங்கினி
சித்தம் கலக்கினி சிந்தை மயக்கினி
சிதற அடித்தென்னை
தீண்டினாள்
சுட்டு விரல் நகம் கொண்டு
சொக்கி இருக்கிறேன்
சிக்கிக் கிடக்கிறேன்
மக்கிப் போகிறேன்
எங்கும் நிறையுமவள்
மெய் நிகர் உலகினின்
தந்திரங்களில்
1 comment:
"எங்கும் நிறையுமவள்
மெய் நிகர் உலகினின்
தந்திரங்களில்" - மிக நல்ல வரிகள்... "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்ற பாவேந்தரின் வரிகளை நினைவு கூரவைத்தன. நன்றி.
Post a Comment