கோண்ட் பழங்குடி ஓவியம்/ ஓவியர்: ரமேஷ் தேக்கம் |
ஊர் நிறைந்திருக்கும் எருமைமாடுகளில்
தன் சிகரெட்டைத் திருடிய
மாடு எதுவென்று
அப்பா அறிவார்
அப்பாவின் அந்த ஒரு மாட்டிற்குத்தான்
அப்பாவிற்கு இரு முறை
இதயம் நின்று மீண்டதும் தெரியும்
அப்பா புகைக்கக்கூடாதென்றும் தெரியும்
ஒடுங்கிய மார்புக்கூடோடு
பரபரக்கும் கைகளோடு
அப்பா சிகரெட்டைத் தேடும்போது
மாடு சிலசமயம்
திருடிய சிகரெட்டை நீட்டும்
பற்ற வைத்தும் கொடுக்கும்
அப்பாவின் சிரிக்கும் கண்களை
பேதமையோடு பார்த்து நிற்கும்
ஏன் என் சிகரெட்டைத் திருடினாயென
அப்பாவும் கேட்டதில்லை
எருமைமாடும் சொன்னதில்லை
எருமைமாடு சிகரெட் பிடிக்காதென்று
எல்லோருக்கும் தெரியும்தானே
ஆனாலும் அப்பா ஊரறியச் சொல்வார்
என் எருமை புகைக்காதென
உண்மையிலேயே எருமை புகைத்த தினத்தன்று
அப்பா எழுந்திருக்கவேயில்லை
அந்த சிகரெட் திருடியதில்லைதானே
2 comments:
ஓவியமே பல விஷயம் சொன்னது. உனக்காக காத்திருக்கிறேன் என்பதைப் போல் இருந்தது. கவிதையில் tinge of sadness இருந்தது, மனதை நெருடியது.
முதலில் மாடு பிறகு எருமை மாடு - does it denotes death?
அப்பாக்கள் மகன்களை எருமைமாடு என்று திட்டும் தமிழ் நாட்டு வழக்கத்தை கவிதையாக்கியிருப்பதாகத் தெரிகிறது. அப்பா மகன் உறவைப் படம்பிடிக்கும் அபாரமான கவிதை- சுந்தர்
Post a Comment