Wednesday, November 30, 2011

நீர் அளைதல்





குழந்தையின்
தளிர் விரல்கள் வீசிய
நீர்த் திவலைகள்
மார் தீண்ட
உயிர் கிளர்ந்து
வெளி நடக்க
அருளெனப் பொழிந்த
மழைத் தூறல்
உள் மன
போகமென
வெளி நிறைக்க
தடுத்தாட்கொள்ளும்
பொழிவாய்
ஆவேசமாய்
பெரிதாய்
பெய்யெனப் பெய்ய
இலக்கற்ற ஓடை
கலந்து சேறாய்
குழம்பி
செல் சேர்க்கையே
இடமென
அரண்டு புரண்ட
ஜலக்கிரீடை
மீனென நீயென வாவென
வாவாவென
நீருலகு நீந்த
நீந்த நீந்த
ஈர்த்த நீர்மை
நீர்த்த நீலம்
என்
நிறை கடலெனவே




உரையாடல்


பேட்டிக்கான சுட்டி: http://www.thesundayindian.com/ta/story/about-national-folklore-support-centre/61/1346/



கவிஞர் ஷங்கர்ராம சுப்பிரமணியனோடு The Sunday Indian பத்திரிக்கைக்காக சமீபத்தில் நான் உரையாடியது பேட்டியாக "எட்டு கோடித் தமிழர்களின் தோல்வி" என்ற தலைப்பில் பிரசுரமாகியுள்ளது.




Tuesday, November 29, 2011

மயில் இறை இயல்





விரித்த தோகை
பெரியது எனவே
வான்கோழியல்ல 
மயில் என்றறிவார்
கடவுள்
ஆதலினால் கறிக்காகாது






Monday, November 28, 2011

நான், நீ, அதே






கடல் கன்னி கூறியது:

வையகமே
கண்ணாடியென்றால்
திரவ வானம் ஊசலாடுவது
ஒரு கடல்

திவலைகள் ஆகும்
கடற்கரைகளோ கோடி

நான், நீ, அதே
ஆழ்கடல் அதிசயங்களின்
நீல மர்மங்களின் 
இலவசங்கள்
எனினும்
மாயச் சுழல் சிக்கி
ஏதேனும் ஒரு
கரையேறிய பின்
வார்த்தைகளேயிருப்பதில்லை
நம் கதை சொல்ல




தன்னறிவு





நாடேது
காடேது
வீடேது
என
தனித்து
இருக்கையில்
அபத்த தொற்றுதலாய்
ஒரு குதூகலம்
கொடியென
பின்னிப் பிணைய
தனித்த மரத்திற்கு
அதுவே
தனித்துவமாயிற்று



Sunday, November 27, 2011

நீர்க்கடன்






தோள் சுமந்த மட்பானையின்
முத்துளை நீரொழுக்கென
இழைகிறது
தூசு தட்டி எடுத்த 
அந்த பழைய ஓவியத்திலிருந்த
பெண் கை வயலின் இசை

பிறர் கேட்பதில்லை அதை 
வீடு திரும்பிய ஆள் நானென்று
அவர்களுக்குத் தெரிவதுமில்லை

பழைய இசைத் தட்டுகள்
பழைய நாவல்கள்
பழைய ஓவியங்கள் 
என என் வெளி நிறைக்கிறார்கள்
இங்கிதமற்று

நிறைவுறா
நினைவுகளின் நீர்க்கடன்
இசையினால் ஒழுக்காக
வெள்ளமாக அலைகளாக
பெருங்கடலாக
நீரால் அமைகிறது உலகு.





அந்தரத்தில் ஒரு வீடு





ஜேனு குருபர் பழங்குடியினரின் வீடு/மேற்குத் தொடர்ச்சி மலை

பழங்குடி பாடல்:


ஆடலழித்து
விளக்கஞ்சொல்லி
படைத்தலடக்கி
மூத்தான்
இளையான்
உயிரிழந்தான்
அஞ்சினான்
உண்டான்
உறங்கினான்
உறவினரோடு
பறவைகளும் வந்தமர
விருந்துண்ண வசதியாய்
அந்தரத்தில் ஒரு வீடு
தாயகப் பேறேயென
அடைந்தாயிற்று 
நேர்த்தியாய்
கற்பிதமாய்
எனினும்
ஏறிச் செல்ல ஏணியில்லை






Saturday, November 26, 2011

தெளிவற்ற கனவது




'கலை மான்' கோண்ட் பழங்குடி ஓவியம்/ஓவியர்: ரமேஷ் தேக்கம்



உள் முகம் நோக்கி ஓடிய 
கலை மானுக்கு கொம்பு
விருட்சமாகவே விரிந்திருந்தது
விருட்சம் வனமாக
வனம் வானாக
வான் வளியாக
வளி மண்டலமாக
மண்டலம் மண்ணாக
மண் பொன்னாக
பொன் மானாக
மான் மாயமாக
மாயம் மீண்டும் மானாக
மயக்குகிறது மாரீசன் வித்தை

தாயேன் தாயேன் எனக்கென 
இறைஞ்சுகிறாள் சீதை

மான்கொம்பு மரமாவதில்லை
விருட்சம் வனமாவதில்லை
மரம் வெறும் மரம்
என்கிறான் இலக்குவன்

ராம பாணம் கிழித்த 
மாயை பொன்னாக
பொன் மானாக
மான் கொம்பாக
கொம்பு மரமாக
களவு போனாள்
மரம்மரம்மரம்மரம்
மரம்மரம்மரம்மரம்
என ஜெபித்த சீதை




Thursday, November 24, 2011

பொம்மைகள் வெறித்து நின்றுவிட்டன



சாந்த்தால் பழங்குடி மர பொம்மைகள்/பொம்மலாட்ட மேடையில் நிற்கும் புகைப்படம்



பொம்மைகள் வெறித்து நின்றுவிட்டன
வேறெதுவும் செய்வதிற்கில்லையெனவும்
குழந்தைகளுக்கு இனி ஏதுமில்லையெனவும்
அறிவிப்பு வெளியாகிவிட்டது

மரப்பொம்மைகள் என்பதினால்
மீண்டும் மரங்களாக்கலாம்
என்றொரு திட்டம்

எவரின் பிரதிமைகளோ இவையென
கூறி மூலங்களை உயிர்ப்பிக்கலாமென்பது
மறு திட்டம்

ஓரிரு நாள் அரசிகளாய் 
அரசுக்கட்டில் ஏற்றலாமேயென்பது
ஏகோபித்த திட்டம்

மர விறகாக்கி 
அடுப்பெரிக்கலாமென்பது
உடனடித் திட்டம்

புது பொம்மையாட்டியை
பயிற்றுவித்து
பொம்மைகளுக்கு 
அன்ன நடை பழக்கலாமென்பது
ஆனந்த திட்டமென்றால்
அன்னம் என்றொரு பறவையேயில்லையாம்
எல்லாமே பரட்டைத் தலை வாத்துதானாம்





என் புருவத்தில் முத்தமிட்டு கிளம்புகிறாய் நீ

தோல் பொம்மலாட்ட கோமாளி பொம்மை



“ஆளற்ற அந்த கடற்கரையில்
தவிக்கும் நுரைகள் 
பாதங்களில் குமிழியிடும்

ஈரமற்ற கைவிரலிடுக்குகளின் வழி
நினைவற்ற பிடி மணல்
ஒட்டாமல் விழும் 

தூரத்து கப்பல்கள்
ஆழ்கடல் சேரும் குதூகலத்தில்
பாய் மரம் விரிக்கும்

என் புருவத்தில் முத்தமிட்டு கிளம்புகிறாய் நீ”

என்றெழுதி கோமாளி உனக்குத் தருவான்



Wednesday, November 23, 2011

என்னை உற்று உற்றுப் பார்க்காதே



உடலில் பச்சை குத்துவதற்கான வடிவம்



என்னை 
உற்று உற்றுப் 
பார்க்காதே

ஏன் உடைந்தாயெனெ
மீண்டும் மீண்டும் 
கேட்காதே

உன் பெயர் இதுதானேயென
சொல்லி சொல்லி
சிரிக்காதே

நீ இன்னும் உயிருடனா என 
கிள்ளிக் கிள்ளி
சோதிக்காதே

நீ எப்படி இப்படியென
மலங்க மலங்க
விழிக்காதே

உன் ரகசியம் நானறிவேன் என
சிணுங்கி சிணுங்கி
நிற்காதே

நம்
ஒரு பிடி சாம்பல்
கரைக்க சீறி வருகின்றன
பேரலைகள்

பாம்புப் பாடகன்



ஒரிசா மாநில பாதசித்ரா ஓவியம்: பாம்பு மாலை அணிந்த பூரி ஜெகந்நாதர்( கவிதைக்கு பொருத்தமில்லாத ஓவியம். சும்மா)


இரட்டைப் பாம்புகள் 
பின்னி நிற்கும் என் 
மன விதானமெங்கும் 
ஒற்றைத் தலையாய்
இரு உடல் கூடுமிடும்
தொடு வானமெனவே
வசீகரிக்க
இரு உடல் பின்னும்
கணம் தோறும்
உயிரிசை வெளியாய்
விரியும் என்னுலகில்
கடல் நோக்கும்
ஒரு பாம்பின் 
உடல் தரிக்கும்
பாம்புப் பாடகன் 
நான் என்றாலும்
என்னிடத்திலில்லை மகுடி
ஊதும் உன் ஜீவ மூச்சு




Tuesday, November 22, 2011

ஒரு பூனையின் அந்தரங்க வாழ்க்கை



கண்ணாடி ஜன்னலில்
முகத்தோடு முகம் தேய்த்து
காதோடு காது நக்கி
காதலாகி கசிந்துருகி
கட்டிலடிக் கூடலில்
குட்டிகள் ஏழாயிற்று

மரப்பெட்டி முதல் வீடு
அடுப்படி இரண்டாம் வீடு என
புகைபோக்கி வந்தடைகையில்
வீடும் ஏழாயிற்று

எலி துரத்தி ஒரு ஜென்மம்
பேயினைச் சீறி மறு ஜென்மமென
சோம்பல் முறித்து
கட்டில் கால் தேய்க்கையில்
விரய ஜென்மும் ஏழாயிற்று


கற்பிதம் பாதியில் நின்றுவிட்டபோது





அது எப்போது வரும் என்று தெரியாது
வரும்போது அறிவித்தல் இருக்காது
வருவதற்கான அறிகுறிகளும்
வராதாதற்கான அறிகுறிகளும்
ஒன்றெனவே பொய்க்கும்
எனினும்

அந்த மிருகத்தின் மின்னும் கண்களை
உற்றுப் பார்த்தவர் எங்கள்
தீர்க்கதரிசிகளாயினர்
காதலைப்போல் என்போர்
எங்கள் கவிஞராயினர்
போரைப்போல் என்போர்
எங்கள் அதிபராயினர்
தவித்திருந்தோர் குடிகளாயினர்
அந்த மிருகத்தைப்
பெயரிடத்தெரியாமல்
கற்பிதம் பாதியில் நின்றுவிட்டபோதுதான்
எல்லாம் உறைந்துவிட்டது
அடிவயிற்று வலியென



கெக்கெலி





வா போகலாமென
பிளவுண்ட நாக்கொன்று
அநாமதேயக் கைபோலவே
மெள்ள நீட்டுகிறது
தெற்குத் திட்டிவாசல்
திறவுகோலை
பெயரற்ற பறவைகளின்
ரெக்கையொலியெனவே
கோபுரம் நிறைக்கின்றன
திடீர் கெக்கெலிகள்
கோல் பற்றி
துளை பொருத்தி
வாயில் திறக்க
மூடிய ஒற்றை இமை
வெட்டிய மின்னலென
வெடித்து விழிக்க
எங்கும் நிறைகிறது
துணுக்காய் சிதறிய
கெக்கெலி முகக்
கண்ணாடிகள்

Monday, November 21, 2011

பேட்டி*




கோண்ட் பழங்குடி ஓவியம்


கிடா விழுங்கும் மலைப்பாம்பல்ல
நான் என அறிய 
வீசினால் தண்ணீர் 
அடித்தால் செத்தது
தாண்டினால் பழுது
கக்கினால் ரத்தினம்
கடித்தால் விடம்
சுருட்டினால்
பைந்நாகப் பாய்
விரித்தால்
சிவலிங்கக் குடை
தரிசித்தால் 
தன் வாலைத் தானே கவ்வுமிது
-----------------------------------------------------------------------------------------------------------------------------
* நாக தோஷம் நீங்குவது குறித்த பேட்டியிலிருந்து

Sunday, November 20, 2011

மாமா



உரித்த நேந்திரன் வாழைப்பழம்/still life/ டிஜிட்டல் ஓவியம்


‘யானைக்கால் பப்படம் உண்டாடே’ என்று கேட்டுக்கொண்டே உள் நுழைந்த மாமாவைப் பார்த்து வெலவெலத்துப் போனான் மு. மாமா பின்னாலேயே மட்டிப் பழம் ஒரு தார், செவ்வாழை ஒரு தார், நேந்திரன் பழ சிப்ஸ் இரண்டு கிலோ, நான்கு ஓலைப்பட்டி நிறைய கருப்பட்டி, ஆறு பாக்கெட் சக்கா பிரதமன் என்று ஒரு குட்டி நாகர்கோவிலே அவரைத் தொடர்ந்து உள் நுழைந்து மு வின் ஒற்றை அறை அப்பார்ட்மெண்டை நிறைத்தது. மாமாவின் மகள் வீட்டில் ஏராளமாய் உறவினர்களாம். கொஞ்சம் தனியாய் சடவாரலாமே என்று மு வீட்டிற்கு வந்தாராம். ஒரு வாரம் இருப்பாராம்.

மு அவசர அவசரமாய் படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் என்று டிவிட்டர் அறிவிப்பு வெளியிட்டு தோழிகள் வீட்டுக்கு வருவது எல்லாவற்றையும் ஒரு வாரம் தள்ளிப்போட்டான். மாமா, மு வுக்கு ஒண்ட சிறிதாய் இடம் கொடுத்துவிட்டு முழு வீட்டையும் ஆக்கிரமித்தார். மு வுக்கு மாமா சொந்த மாமா இல்லை; தாயாய் பிள்ளையாய் பழகிய கூட்டத்தினால் மாமா. மு மருமக்க வழி வெள்ளாளன் இல்லையே என்று மாமாவுக்கு பெரும் சிரிப்பு உண்டு. நேரடியாகவும் மறைமுகமாகவும் அதை இடித்துக் காட்டுவார். மு பேச்சிலர் பாயாக ப்ரெட்டும் ஜாமும் அவசர அவசரமாய் செய்து சாப்பிட்டுவிட்டு வேலைக்கு ஓடிக்கொண்டிருந்தது மாமாவிடம் ரத்தக் கண்ணீரை வரவழைத்தது. மாமாவுக்காக மு மாகி நூடுல்ஸ் விசேஷமாக செய்து போட்டபோது நம் ஊர்க்காரப் பயல் இப்படி நகரத்தில் வந்து கஷ்டப்படுகிறானே என்று அவருக்கு அனுதாபம் மிகுந்து விட்டது. 

மாமா பிரமாதமாக கதை சொல்லுவார். இலக்கியத்தில் எங்கெல்லாம் நாஞ்சில் நாட்டு வெள்ளாள உணவு வகைகள் குறிப்பிடப்படுகின்றன, என்று மாமா பேசுவதைக் கேட்க பெரும் கூட்டமே கூடும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மருமக்கள் வழி மான்மியம் நூலில் அவியல் பொரியல் தீயல் துவையல் என்று பாடியிருப்பதை மாமா மேற்கோள் காட்டி சாப்பாட்டு கதைகள் சொல்வதைக் கேட்க ஊரே கூடும். இங்கே நகரத்தில் மாமாவின் நாஞ்சில் நாட்டு சமையல் குறிப்பு இலக்கியத்தைக் கேட்க யாருமில்லை என்பதில் மாமாவுக்கு பெரிய மனக்குறை. மகள் வீட்டிலிருந்து தப்பி, மு வீட்டில் மாமா தங்குவது அதனால்தான். மு வைப் பிடித்து வைத்து சக்க பழ அல்வா செய்வது எப்படி, புளிசேரி மரச்ச்சீனி அப்பளம் இணைக்கு உகந்த வேறு இணையை சொல்ல முடியுமா என்றெல்லாம் கதை சொல்வார்; மு வுக்கு எச்சில் ஊறும், மனம் பதறும், ஊர் விட்டு வந்தோமே என்று கண் கலங்கும். மாமாவுக்கு மு கண் கலங்குவதைப் பார்த்து உற்சாகம் பீறிடும். நாஞ்சில் நாட்டு கல்யாணங்களில் தான் பந்தி விசாரித்த சம்பவங்களையும் அண்டா அண்டாவாக எரிசேரி, புளிசேரி என்று ஆக்குப்பறைகள் நிறைந்திருப்பதையும் மாமா மேலும் மேலும் விவரிப்பார். மு வின் கனவுகளெல்லாம் ஆக்குப்பறைகளாகிவிடும். அவன் சதா ஒரு சாம்பார் வாளியைத் தூக்கிக் கொண்டு நடப்பதான பிரேமை கொள்வான். மாமா ஒரு வாரம் தங்கியிருந்ததில் மூன்றாம் நாளே கண்ணுக்குத் தெரியாத சாம்பார் வாளி மு வின் கைக்கு வந்துவிட்டது. தன் மடிக்கணிணியைத் தூக்கிக் கொண்டு அலுவலகம் செல்வதுகூட சாம்பார் வாளியைத் தூக்கிக்கொண்டு பந்தி விசாரிக்கபோவது போல இருந்தது.

மு அலுவலகத்திற்கு சென்றிருக்கும்போது பொழுதுபோகாத நேரத்தில் மாமா மு வின் டிவிடி படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். சார்லி சாப்ளினின் கறுப்பு வெள்ளைப் படங்கள் மாமாவுக்கு மிகவும் பிடித்துப்போயின. முவின் மேல் அதனால் மாமாவுக்கு பிரியம் அதிகமானது. மு மாமாவுக்கு சாப்ளின் பிடித்தது எப்படி என்று சூசகமாக விசாரித்தான். சாப்ளின் படங்களில் எத்தனை காட்சிகளில் வண்டி வண்டியாய் ஐஸ்கிரீமும் மேற்கத்திய உணவுப்பண்டங்களும் வருகின்றன என்று மாமா ஆர்வமாய் கணக்கு சொன்னார்.

முவுக்கு உபவாசம் இருந்துவிடலாமா என்னும் அளவுக்கு மனம் முழுக்க நாஞ்சில் நாட்டு ஆக்குப்பறைகளாகிவிட்டன. உரித்த நேந்திரன் பழம் ஒன்றினை சாப்பிடாமல் வேண்டாத நாவலை குப்பைக் கூடையில் போடுவதைப் போல நான்காம் நாள் காலையில் தூக்கிப்போட்டான். அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தால்கூட மாமா காத்திருந்து கதை சொன்னார்.

மாமாவின் கதைகளிலிருந்து தப்பிப்பதற்கே மு மாமாவை பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் அறிமுகம் செய்து வைத்தான். குழந்தைகள் சனிக் கிழமை மாலை தோறும் மொட்டைமாடியில் ஏதாவது நடனமாடிக்கொண்டிருந்தனர். மாமாவுக்கு அந்த வார நடனத்தில் பங்குபெற அழைப்பு வந்தது. மாமா உற்சாகமாக குழந்தைகளோடு ஐக்கியமாகிவிட்டார். அந்த வாரம் காண்வெண்ட் டான்ஸ். எல்லோரும்  ஆளுக்கொரு குடையை கையில் வைத்துக்கொண்டு ஒன் டூ த்ரீ என்று மூன்று எட்டு முன்னால் வர வேண்டும் குடையை விரிக்கவேண்டும். அடுத்த ஒன் டூ த்ரீ யில் பின்னால் மூன்று எட்டு போய் பக்கவாட்டில் குடையை விரித்து காட்டவேண்டும். குடை இல்லாத கை இடுப்பில் ஊன்றியிருப்பது அவசியம். 

மாமா மொட்டைமாடி காண்வெண்ட் டான்சில் பங்கேற்றது களேபரமாயிருந்தது. மாமா பரத நாட்டிய கலைஞர் போல இடுப்பில் கையை ஊன்றியிருந்தார். மறு கையில் அரையாள் நீளமுள்ள மான் மார்க் குடை. குழந்தைகள் சுற்றி நின்று கோரசாக ஒன் டூ த்ரீ க்கு பதிலாக எரிசேரி புளிசேரி துவையல் என்று பாட மாமாவும் பாடிக்கொண்டே மூன்று எட்டு முன் வந்து குடையை விரித்து காண்பித்தார். அவியல் பொரியல் பப்படம் என்று குழந்தைகள் பாடியபோது பின்னால் மூன்று எட்டு போய் இடது பக்கவாட்டில் குடைவிரிப்பு. மீண்டும் எரிசேரி புளிசேரி துவையலுக்கு முன் நோக்கி நடை குடை விரிப்பு. கிச்சடி பச்சடி பழங்கறிக்கு பின்னால் மூன்று எட்டு போய் வலது பக்கவாட்டில் குடை விரிப்பு. பப்படம் பிரதமன் பாயாசம் என்ற வரிக்கு மூடிய குடையை மாமா தலைக்குமேல் வேலுத்தம்பி தளவாய் சுருள் வாளை சுழற்றியது போல சுழற்றி முன்னால் தரையில் ஊன்றி கிங்கரன் போல் போஸ் கொடுத்தார். மு விற்கு மொட்டைமாடியே ஆக்குப்பறையாகிவிட்டது போல இருந்தது. குழந்தைகள் ஒவ்வொன்றும் குட்டி அண்டா போல தோன்றின. ஆனால் குழந்தைகளிடையே மாமா மிகவும் புகழ் பெற்றவராகிவிட்டார்.

முவை சந்திக்க நேரும்போதெல்லாம் இப்போது குழந்தைகள் உங்கள் மாமா எப்போது திரும்ப வருவார் என்று கேட்கின்றனர். 

Saturday, November 19, 2011

என்று ஒரு ஆறுதல்



"முள்ளிவாய்க்கால்" ஓவியம் அபராஜிதன் ஆதிமூலம் Acrylic on canvas 40"x75" Image courtesy Singh and Thapar Projects 


நூலகத்தை ஜாதிக்காய் பெட்டிகளில்
அடைத்து இறுக்கி ஆணியடித்து
தொழுவத்து குடிசையில் வைத்தாயிற்று
பெற்றோரை நடுக்கூடத்தில்

மார்போடு அணைத்த குழந்தை
கையடக்க மலிவுப் பதிப்பு
கந்த சஷ்டிக் கவசம்

அம்மியையும் குழவியையும்
எடுத்துச் செல்லவியலா துக்கத்தில்
ஒரு கையில் மாங்கன்று
மறு கையில் கறிவேப்பிலைச் செடி
ஏந்தி நிற்கும் துணைவி

கூடுதல் பாதுகாப்பிற்கு
வள்ளி திருமணம் நாடகம்
ரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் பதிப்பு

கன்றுகள் பயணம் பிழைக்காவிடில்
மறு ஏற்பாடென
சிறு சாக்கு நிறைய மாங்கொட்டைகள்
சீரகம் கொத்துமல்லி
வேறு என்ன என்ற திகைப்பில்
ஒரு பிடி பச்சை விரலி மஞ்சள்

எந்த ஊரிலும்
விரிந்த வானும்
ஆழ் கடலும்
சேரும் கோடு
கரு நீலம்தான்
என்று ஒரு ஆறுதல்.





புறாக்கூடு





சிபி சக்கரவர்த்தி கதை/அஜந்தா குகை ஓவியம்



மேஜையில் கத்தி
குழாயில் நிற்காத நீர்ச் சொட்டு

உறைந்த பனியில்
கெடாத மாமிசம்

கழுவிய பாத்திரங்களில்
நிரந்தரக் கறை

விழுந்த கோப்பையில்
மீந்த மதுத்துளி

நிறைந்தே இருக்கிறது
குப்பைக் கூடை

சுவர் அடைக்கும்
மான் தலைக்கொம்பு

கண்ணாடித் தொட்டியில்
தூங்கா மீன்கள்

புறா கட்டும்
புதுக் கூடு



Friday, November 18, 2011

அந்தக் காலடிச் சத்தம்






பல நாட்களாக
ஒலிக்கிறது
அந்தக் காலடிச் சத்தம்

எதிர்பாராத
சமயங்களில்
தோள் தொட்டு
திருப்பும்
கை போல்
ஒலிக்கிறது
அந்தக் கால்

பிடித்து விடலாம்
என்று திரும்பினால்

கடந்து செல்லட்டும்
என்று நின்றால்

கேட்கவில்லை
என மறுத்தால்

கூட நடக்க
முயற்சி செய்தால்

ஒலிப்பதில்லை
அந்தக் காலடிச் சத்தம்

யாரோ காலற்றவளின் இசையென
கற்பிதம் கொள்ளும்போது

முத்தம் வேண்டி நிற்கும்
இதழ்களெனவே

அணைக்க துடித்து இருக்கும்
மார்பெனவே

சேர நினைக்கும்
பொற் பாதங்களெனவே




Thursday, November 17, 2011

யானை பற்றி அல்ல யானை




கோண்ட் பழங்குடி ஓவியம்/ ஓவியர்: ரமேஷ் தேக்கம்


கல்லும் சொல்லும்
கவிதை
உடையானை
அறிந்தானை
விடுத்தானை
எடுத்தானை
கல் யானை





----------------------------------------------------------------------------------------------------------
*கம்பனின் சரஸ்வதி அந்தாதி: “அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி”










Wednesday, November 16, 2011

தியானம்








விபரங்கள் மாறிவிட்டன
ஒற்றைத் தெரு விளக்கு
ஆளற்ற தெரு
தூர் வாறா கிணறு
நாழிக் கிணறு
இறங்கினால் 
ஏழு படி
ஏறினால்
எட்டு படி
படிகளில் நிசப்தம்
அறிந்த அனுபவம்
விபரங்கள் மாறிவிட்டன
எட்டு படி
ஏறினால்
ஆளற்ற தெரு நிசப்தம்
அறிந்த அனுபவம்
ஒற்றைத் தெரு விளக்கு
ஏழு படி
இறங்கினால்
தூர் வாறா கிணறு
நாழிக் கிணறு
விபரங்கள் மாறிவிட்டன
நாழிக் கிணறு
தூர் வாறா கிணறு
ஏழு படி
எட்டு படி 
இறங்கினால்
நிசப்தம் 
அறிந்த அனுபவம்
ஏறினால்
ஆளற்ற தெரு 
ஒற்றைத் தெரு விளக்கு








Tuesday, November 15, 2011

காளிக்கு கூளி கூறியது*




ராஜஸ்தான் வாய்மொழி காப்பியமான பாபுஜி திரைச்சீலை ஓவியத்தின் ஒரு சிறு பகுதி



நாற்படை திரண்டது
ஓகோ
சங்கு முழங்கியது
ஆகா
முரசு அதிர்ந்தது
ம்ஹ்ம்
இயமரம் இரட்டின
ஓகோ
கொம்பு ஒலித்தன
ஆகா
குடை நிழற்றின
ம்ஹ்ம்
பிணங்கள் விழுந்தன
ஓகோ
பேய்கள் ஆடின
ஆகா
கதறி அழுதனர்
ம்ஹ்ம்
கொடி விளங்கின
ஓகோ
குதிரை கனைத்தது
ஆகா
தமையன் ஏறினான்
ம்ஹ்ம்
தம்பி குதித்தான்
ஓகோ
இடறி விழுந்தனன்
ஆகா
நாண்டு செத்தனன்
ம்ஹ்ம்
தூக்கி போட்டனர்
ஓகோ
காறி உமிழ்ந்தனர்
ஆகா
மறந்து போயினர்
ம்ஹ்ம்
-----------------------------------------------------------------------------------------------------------------
* காளிக்கு கூளி கூறியது பரணி இலக்கியத்தில் ஒரு வடிவக்கூறு

தாந்திரிகம் குறித்து


Kuntuzangpo- பெண் ஆற்றலுடன் கூடிய புத்தர்


வஜ்ரயோகினி பதிவினைத் தொடர்ந்து வஜ்ராயான பௌத்தம், தாந்திரிகம், எதிர் கலாச்சாரம், பின் நவீனத்துவம் ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி விளக்கம் வேண்டி ஏராளமான கடிதங்கள் எனக்கு வந்துள்ளன. இவற்றைப் பற்றி என் பார்வையையும் ஆய்வினையும் முன் வைப்பதற்கு முன் தமிழில் இப் பொருள்கள் பற்றி எழுதப்பட்டுள்ளவை என்ன என்று தேடிப் பார்த்ததில் கீற்று வலைத்தளத்தில் சின்னத்தம்பி என்பவரின் கட்டுரை ஒன்றும் சொல்வனம் இணையதளத்தில் மித்திலன் எழுதிய புத்தக விமர்சனம் ஒன்றும் கிடைத்தன. இந்த இரண்டு கட்டுரைகளோடும் எனக்கு பல முரண்பாடுகள் இருந்தபோதிலும் என் பார்வையையும் ஆய்வினையும் முன் வைப்பதற்கான பின்புலத்தினையும் தகவல்களையும் இக்கட்டுரைகள் தருவதாக நினைக்கிறேன். அவற்றின் சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன். இந்த கட்டுரை ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். என் ஆய்வினை முன்வைப்பதற்கு தியான முறைமைகள் பற்றிய அடிப்படை விளக்கக் கட்டுரைகள் முதலில் எழுதப்படவேண்டும். வேறு யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தேடி வருகிறேன். சரியான கட்டுரைகள் கிடைக்கவில்லையெனில் அவற்றை எழுதிய பின்னரே தாந்திரிகத்தை உரிய முறையில் விவாதிக்கமுடியும். இது தவிர என் ஆய்வு களப் பணி மூலம் சேகரித்த பழங்குடி மக்களின் வழிபாட்டு சடங்குகள் சார்ந்தது. இவை பற்றி பொதுத் தளத்தில் அதிகமான தகவல்களோ ஆய்வுகளோ இல்லையாதலால் அவற்றை ஒழுங்குபடுத்திக்கொள்வது முறையான புரிதலுக்கு இட்டுச் செல்லும். இவ்வகைக் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கும்போது எனக்கு வந்துள்ள கடிதங்களையும் வெளியிடுகிறேன். அதுவரை கடிதம் எழுதிய நண்பர்கள் காத்திருக்க வேண்டுகிறேன். பெண் ஆற்றலை முதன்மைப்படுத்தும் தாந்திரிக மரபுகளை விவாதிக்க பொதுத்தளத்திலுள்ள பெண் பிம்பங்களை நாம் அணுகும் முறையினையும் சேர்த்து பார்க்கும்போதே தாந்தரிகம் எவ்வகையான எதிர் கலாச்சார விழுமியங்களை தன் செயல்முறைகளில் கொண்டிருக்கிறது என்பதை லகுவாக விளக்கமுடியும். இந்த நோக்கத்தைக்கொண்டே நான் அசின், நமீதா ஆகிய பெண் பிம்பங்கள் குறித்து எழுதியது. அடுத்து தியான பிம்பமாகக் கொள்ளக்கூடிய பொது பெண் பிம்பம் எது என்றும் தேடி வருகிறேன். இப்போதைக்கு இந்தக் குறிப்புகள் போதுமானவை.

“தாந்திரிகம்- யோகம், போகம், அர்த்தநாரீஸ்வரம்”- மித்திலனின் புத்தக விமர்சனம்:

http://solvanam.com/?p=17369


“தாந்திரிகத்தின் பருப்பொருள் சார்ந்த சூழல்”- நல்லதம்பியின் கட்டுரை
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13744:2011-03-23-06-46-26&catid=1286:2011&Itemid=544 


Monday, November 14, 2011

பதினாறு





காற்றற்ற காலையில் கூரையில் தொங்கும் மழைத்துளி
புல்வெளியில் மேயும் வெள்ளைக் குதிரைகள்
தெருவில் தோழி
வானில் நாரைகள்
மாடத்தில் புறா

உதிரும் நாகலிங்கப் பூ
வெடித்த வேர் பலா
துள்ளி ஓடும் அணில்

தூரத்தில் சங்கொலி
யாரோ சப்பு கொட்டுகிறார்கள்
மேஜையிலிருந்து விழும் கரண்டி
சிதறும் கண்ணாடி
சீறும் பூனை

மூடாத புத்தகம்
முடியாத கவிதை

என்றும் பதினாறாய் தரையில் உன் உடல்




போக பிம்பம் நமீதா




அசினுக்கு உளுந்தங்களி கிண்டி போட்டாயிற்றா என்று கேட்டு வந்துள்ள கடிதம் உட்பட அசின் கட்டுரைக்கு வந்துள்ள பல எதிர்வினைகள் என் பிம்ப ஆய்வு முறையை சரியாக உள்வாங்கிகொள்ளவில்லையாதலால் இந்தக் கட்டுரைக்குள் நுழைவதற்கு முன் என் முறைமையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் அசினுக்கோ நமீதாவுக்கோ ரசிகனல்ல. நான் அவர்களின் பிம்பங்கள் நம்மோடு எப்படி உறவாடுகின்றன என்றுதான் எழுதுகிறேன். தமிழ் வியாபார சினிமா என்பது பிம்பத் துய்ப்பின் மூலம் பெறப்படும் இன்பங்களின் உற்பத்தி எந்திரம். பிம்பங்களின் ஆய்வு மூலம் நம் ஆசைகளின் உட்கட்டுமானங்களை அறிகிறோமே அன்றி பிம்பங்களின் உரிமையாளர்களையோ, பிம்பங்களின் செயற்கை காம உறுப்புக்களையோ அல்ல. ஹா நான் அந்த பென் பிம்பத்தைப் பார்த்து சொக்கிவிட்டேன் மயங்கிவிட்டேன் என்று எழுதினேன் என்றால் அந்த பிம்பம் ஏற்படுத்தும் தாக்கத்தினை நான் எழுத்தில் பாவனை செய்கிறேன், நிகழ்த்திக் காட்டுகிறேன் என்று வாசித்தால் நல்லது.

இன்னும் இரண்டு சுற்று பெருத்தால் ஷகீலா இன்னும் இரண்டு சுற்று இளைத்தால் நயனதாரா என்று கஷ்குமுஷ்கு என்றிருக்கும் நமீதா பெண் பிம்பம் நம் காலத்தின் போக பிம்பம் ஆனதெப்படி என்பது வரலாற்று ஆராய்ச்சிக்குரியதாகும். நாயக்கர் கால கோவில் சிற்பங்களிலேயே நாம் பருத்த தனங்களோடு கூடிய இடை விரிந்த கொழுக் மொழுக் பெண் சிலைகளைப் பார்க்கிறோம். அதற்கு முந்தைய சோழர் கால பல்லவர் கால கோவில்களிலுள்ள பெண் சிலைகளில் முலைகளின் வளப்பத்திற்குக் குறைவில்லையென்றாலும் அவை கூரிய நாசியையும், மெல்லிய உதடுகளையும், கொடி இடையையும் உடைய ஒல்லிக்குச்சி பெண் சிற்பங்கள். நாயக்கர் கால சிற்பங்களுக்கு அடுத்தபடியாக பருத்த முலைகளும் செழித்த தொடைகளும் கூம்பிய தலையும் உடைய பெண் சுடு மணற் சிற்பங்களை தாய்த் தெய்வ வழிபாட்டிலேயே நாம் பார்க்கிறோம்.  நிலம், நாடு, குடும்பம், விவசாயம் ஆகியவற்றின் வளமை குறியீடாக வழிபடப்படும் பெண் பிரதிமைகள் அவை. கடுமையான பஞ்சங்கள் பல கண்ட நம் வரலாற்றில் தாட்டியான பெண் பிம்பம் அழகானதாகவும், வசீகரமானதாகவும் செல்வத்தின் குறியீடாகவும் பல தலைமுறைகளாக நிலை பெற்றுவிட்டது.

தமிழ் சினிமாவின் ஆரம்பகட்டங்களிலிருந்து தாட்டியான சதைப்பற்று அதிகமுள்ள பெண்பிம்பங்களே கதாநாயகி பிம்பங்களாக இருந்து வந்திருக்கின்றன. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ராணா பிரதாப் சிங் போன்ற சரிந்த தொப்பைக் கதாநாயகர்களுக்கு ஏற்ப சதைப் பற்றுள்ள கதாநாயகி பிம்பங்களே மையத் திரையை ஆக்கிரமித்திருந்தன. எழுபதுகளின் இறுதியில் எண்பதுகளில் இந்த நிலைமை மாறி  அடுத்த வீட்டுப் பெண்ணைப் போன்ற தோற்றமுடைய சாதாரண பெண் பிம்பங்கள் கதாநாயகி பிம்பங்களாயின. இந்த சாதாரண பெண் பிம்பங்களுக்கு எதிரிடையான கள்ள இன்பத்தை ஊக்குவிப்பனவாக குண்டு பெண் பிம்பங்கள் தமிழ்த் திரையில் இடம் பெற்றன. தீபா என்ற பெண் பிம்பம் இந்தப் போக்கின் மெல்லிய வடிவமென்றால் ஜெயபாரதி, ஜெயமாலினி ஆகிய பெண் பிம்பங்கள் கடின வடிவங்களாகும். தென்னிந்திய சினிமாப்படங்களில் இந்த பிம்பங்கள் மழையில் நனைந்தபடியே வாத்து அல்லது ஆடு மேய்க்கும் காட்சிகள் மிகவும் புகழ் பெற்றவை. ரவிக்கை இல்லாமல் வாத்து மேய்த்தது போக குட்டைப்பாவாடை மார்க்கச்சை மட்டும் அணிந்து இந்தப் பெண்பிம்பங்கள் பேய்களாய் ஆடியதைப் பார்த்து தென்னிந்தியாவே கலகலத்துப்போயிற்று.


மேற்சொன்ன பெண் பிம்பங்களின் வம்சாவழியிலேயே நமீதாவின் பிம்பமும் போகப்பொருளாயிருக்கிறது.  நமீதா பிம்பத்தோடு நேரடியான இன்பத் துய்ப்பு உறவினை பார்வையாளர்களுக்கு இதுவரை வந்துள்ள திரைப்படங்கள் தரவில்லை; மாறாக கள்ள இன்பத் துய்ப்பினையே அவை ஊக்குவிக்கின்றன.

பங்கேற்போரிடையே நட்பு, பரஸ்பர இசைவு, பரஸ்பர மரியாதை, நேரடித் தன்மை, துய்ப்பினை மறுப்பதற்கான உரிமை, கடப்பாடு ஆகியன இல்லாத இன்பத் துய்ப்பு உறவுகள் அனைத்தும் கள்ளத் துய்ப்புகளே. கள்ளத் துய்ப்புகளின் சித்தரிப்புகளும் காட்சிகளும் அவற்றில் பங்கேற்போரை வெற்று சதைக் கோளங்களாகக் குறுக்குகின்றன.

கள்ள துய்ப்பு காட்சிகள் மட்டுமே நிறைந்த படமாக சமீபத்தில் வெளிவந்த கன்னட நமீதா படத்தினை இங்கே உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்தக் கன்னடப் படத்தில் நமீதா பிம்பம் ஹடயோகம் கற்பிக்கும் டீச்சர் பாத்திரத்தை ஏற்றுள்ளது. தமிழ் சினிமாவும் இதற்குக் குறைந்ததில்லை என்ற விதத்தில் மசாஜ் பண்ணுவது எண்ணெய் குளியல் என்று காட்சிகள்.


இது தவிர ஆண் சுத்த கனவான், பெண் மோகினி, பைசாசம், மயக்குபவள், இன்பம் துய்ப்பவள் என்ற தமிழ் சினிமாவின் விசுவாமித்திரர்-மேனகா archetype கதைகளிலும் சம்பவங்களிலும் நமீதா பெண் பிம்பம் மேனகாவாக இருக்கிறது.


கள்ளத்துய்ப்பு சம்பவங்கள் என்பவை எனக்கு எதுவும் தெரியாதே என்ற பாவனையில் இருக்க நனவற்று உடல்களையும் உணர்வுகளையும் பாலின்பம் துய்க்க விடுவனவாகும். மக்கள் நெரிசல் மிகுந்த  பஸ்கள், ரயில்கள், கோவில்கள், தெருக்கள், திருவிழாக்கள் என இன்றைக்கு உடல்கள் தெரியாதே என சதை இன்பம் துய்க்கின்றன என்றால் அவைகளுக்கான நிகர் அனுபவமே நமீதா என்ற பெண் பிம்பத்தினை திரையில் பார்ப்பதாகவும் இருக்கிறது.

சதைக்கோளம் என்ற நிலைமை மாறி நமீதா என்ற பெண் பிம்பத்தின் நடிப்பினை திரையில் பார்க்க ஆர்வமாய் இருக்கிறேன்.

Sunday, November 13, 2011

என் தேவதைக்கு ஒரு ஆஸ்ப்ரின்

கோண்ட் பழங்குடி ஓவியம்/ஓவியர்: ரமேஷ் தேக்கம்




பெரும் துக்கத்தில்
வாய்விட்டு அழுதபோதும்
என்னவென்று கேட்காத
என் தேவதையின்
சிறு தலைவலிக்கு
ஒரு ஆஸ்ப்ரின்
எடுத்து
பின் பறந்தேன்

செல்லுறு கதியில்
செல்லும் வினை*

உன் பறத்தல்
என் பறத்தல்
நம் பறத்தல்
ஆகும் என

----------------------------------------------------------------------------------------------------------
 *கம்பனின் வரி- பால காண்டம்/ஆற்றுப்படலம்

Saturday, November 12, 2011

யட்சினி



யட்சினி டிஜிட்டல் ஓவியம்/வரைந்தவர் கவிஞர்



யட்சினியை யாரும் கேட்டதுண்டோ பார்த்ததுண்டோ

என் பேய்க்கவிதை ஒன்றினில்
வந்து சேர்ந்தாள் தாமதமாக


பருத்த முலைகளும் செழித்த தொடைகளும்
விரித்த கூந்தலும் மோகன சொரூபமென
சிறுத்த இடையொடு
எங்கும் தோன்றினாள்
எதிலும் தோன்றினாள்
எந்தன் யட்சினி


கணிணி திரை பிம்பமோ
அகலத் திரை மயக்கமோ
போல இல்லை
எனச் சொல்ல இல்லை
என் கோரப் பல்லழகி


ரத்த காட்டேரி எந்திர சொரூபினி
மின்னல் வாகினி மிளா விழுங்கினி
சித்தம் கலக்கினி சிந்தை மயக்கினி
சிதற அடித்தென்னை
தீண்டினாள்
சுட்டு விரல் நகம் கொண்டு


சொக்கி இருக்கிறேன்
சிக்கிக் கிடக்கிறேன்
மக்கிப் போகிறேன்
எங்கும் நிறையுமவள்
மெய் நிகர் உலகினின்
தந்திரங்களில்


ரேழியில் ஒரு பாவை




தமிழ்நாட்டு தோல் பாவை 'பாடகி'



ரேழியில் ஒரு
பாவை பாடியது

குடமே
பனிக்குடமே
நற்குடமே
பொற்குடமே

இலையே
சிற்றிலையே
(முதுகு நோவ)
இன்று முற்றும்
இருந்திளைத்த சிற்றிலையே*

குயிலே
சிறுங் குயிலே
கருங் குயிலே
கூவுமென் கருங்குயிலே

சங்கே
நற்சங்கே
வெண் சங்கே
கோலப்பெருஞ் சங்கே

குடம் ஆறாகவே
இலை காடாகவே
குயில் வான் ஆகவே
சங்கு கடலாகவே

கொங்கைக்
குங்குமம்
தான் அழியவே

அருள்வாய்
தருவாய்
நிறைவாய்




--------------------------------------
* ஆண்டாள்

Friday, November 11, 2011

வீரகாவியம்

கர்நாடகத்து தோல்பாவை 'சோளக் காடு'




வீரகாவியம் பாட
ஏதுமில்லை
இன்றெனக்கு


சோளக்கொல்லையை
உப்பிட்டு தீயில் வாட்டி
தட்டிலெடுத்து
திரும்பி நிற்க
தட்டிப்பறித்து
வெளிப்பறந்த
காக்கை விரட்டிய
சாகசம் தவிர
ஏதுமில்லை
இன்றெனக்கு


வான்கோவின்
காக்கை பறந்த
சோளக்காடு
நினைவில் தட்ட
முட்டி மோதி
உள் நுழைந்தால்
காக்கை இல்லை
அங்கேயும்
எந்தனுக்கு


தரையில் கிடந்த
ஒற்றைப் பச்சை
சோள மணி
வான்கோ நினைவில்
தீக்குத் தப்பி
காக்கைக்குத் தப்பி
எனக்குத் தப்பி
கிடுகிடுவென
முளைவிட்டு
வேர்விட்டு
வளர்ந்து
விரிந்து
கண் முன்னே
மஞ்சள்
வனமாயிற்று
உந்தனக்கு


வீரகாவியம் பாட
வேறொன்றுமில்லை
இன்றெனக்கு




தன் நிழலை சுமந்து திரிபவன்


கர்நாடகத்து தோல் பாவை 'கும்பகர்ணணை எழுப்புதல்'




1
தன் நிழலை சுமந்து திரிபவன்
உண்மையில் உறங்கும்
கும்பகர்ணன்

2
உண்மை உறங்கும்
தன் நிழலை
சுமந்து திரிபவன்
அறிவதில்லை
தன் நிழல்
கூத்தாடும்
என

3
கூத்தாடும் தன் நிழல்
தன்னுடல் பொத்தலினால்
விரியும் குறுகும்
என்றறிந்தாலும்
பாய்ச்சும் ஒளி
மேலும் வேண்டி
தூங்கிக்கிடப்பான்
கும்பகர்ணண்

4
முந்நூறு ராமாயணங்கள்
சொன்னாலும் சரி
ஆயிரம் ராமராஜ்யங்கள்
கற்பித்தாலும் சரி
அரசுக் கட்டிலில்
எப்போதுமே
கும்பகர்ணன்

5
ஓகோ
ஆகா
ம்ஹ்ம்
என்று
குறட்டை
விடுவான்
கும்பகர்ணண்





 ----------------------------------------------------------------------------------------------------------------------
(மேலும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் சேர்க்கப்படும். மீண்டும் மீண்டும் இங்கே வருகை தரவும்)



ரதி பந்தம்





காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சுவரோவியம் புகைப்படம்: பாலாஜி ஶ்ரீனிவாசன்




ரதி
உடல்களால் உருவம் சமைக்கும்
உத்திகள் சிலவுண்டு
என்னிடம்

நடனமல்ல 
பிம்பமல்ல 

நினைவின் அடுக்குகளால் 
தொகுத்தால் 
யானையாகும் சில

சாயல்களின் சேர்க்கையை
ஆசையென்றால்
குதிரையாகும் பல

இன்றைக்கே இப்போதே 
இக்கணமே எனில்
சிதிலமே கூடும்

எனினும் காமபந்தம் வாழ்வுடைத்து.





Thursday, November 10, 2011

ஆடி அலுத்துவிட்டது குஞ்சிதபாதனுக்கு


பகரியா ஹிமாசல பிரதேச மினியேச்சர் ஓவியம் 'சிவக் குடும்பம்'







ஆடி அலுத்துவிட்டது குஞ்சிதபாதனுக்கு

ஓடும் நட்சத்திர ஆறுகள்
எல்லையற்று விரியும் வெளி
விழுங்கும் கரும்புள்ளிகள்
உருவாகும் பிரபஞ்சங்கள்
அலுத்துவிட்டது ஐயனுக்கும் அம்மைக்கும்
வெற்றாக ஆடி ஆடி.

பூத கணங்களை ஆடுங்களென
விட்டுவிட்டு

பையொன்றைத் தோளில்
மாட்டிக்கொண்டு
குழந்தைகளைக்
கூட்டிக்கொண்டு
காட்டிற்குச் சென்றார்
இன்பச் சுற்றுலா

முன்பு உரித்த
யானைத்தோல் விரித்து
அம்மையும் அப்பனும்
உட்கார்ந்து சமைக்க
குழந்தைகள் விளையாட
காளையும் புலியும்
கொஞ்சிக் குலாவ
அக்கடா என்றிருந்தார்கள்
பூமியின் அரவணைப்பில்



அசின் என்றொரு பெண்பிம்பம்



அசின் பெண் பிம்பம்/திரை நட்சத்திரம்


திருச்சூர் வடக்கன்நாதசாமி கோவில் பிரகாரத்தில் பார்த்த பெண்ணின் குழிசடையையும், நெற்றி சந்தனக் கீற்றையும் நீக்கி, ஜீன்ஸ் மாட்டி நடக்கவிட்டது போல ‘சுட்டும் விழிச் சுடரே’ என்ற பாடலுக்கு ஒரு பெண்பிம்பம் தொலைக்காட்சியில் நடந்து போய்க்கொண்டிருக்க, அந்த பிம்ப உரிமையாளரின் பெயர் அசின் என்று பின்னால் அறிந்தேன். அந்தப் பாடலில் அசின் பெண் பிம்பத்தின் வசீகரத்தில் நிலை தடுமாறியது கொஞ்சமா நஞ்சமா!


ஜீன்சின் மேல் பட்டியில் கை விரல்களைச் சொருகிக்கொண்டு, கால் மாற்றி கால் மாற்றி, தொடைகள்  உராய அசின் பெண் பிம்பத்தின் நடை ஆணைச் சீண்டும் அழைப்பிதழ்; இளமை மட்டுமே அறியும் ஆனந்தத்தின், அதன் சுதந்திர உணர்வின் வெளிப்பாடு அது. ஷாம்பூ போட்டு பரத்திய கூந்தல் நடையின் லயத்திற்கு ஏற்ப மெலிதாகப் பறப்பது கூடுதல் அதிர்ஷ்டம்.

அசின் பெண்பிம்பத்தின் கண்களில் தெரியும் ஒளி உணர்வுக்கு ஏற்ப நிறம் ஏற்பதில்லை என்று எனக்கொரு புகார் உண்டு. கே.ஆர்.விஜயா, ஶ்ரீவித்யா, ரோஜா, ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ,கோபிகா சாவ்லா, பிரியா மணி என்று பல பிற பெண் பிம்பங்களின் கோல விழிகளில் உணர்வு உடனே தொற்றி கடலாழம் காண்பிக்கும். அசின் பெண்பிம்பத்திலோ கண்களில் நீர் மல்கி சொட்டாமல் நிற்கும்போது கூட பிளந்த உதடுகளின் தாபமே தெரியும். சில்க் ஸ்மிதா பெண்பிம்பத்தின் கண்களில் தெரியும் தாபம் வெறுமையும் ஆழ்ந்த வெறுப்பும் கொண்டது; ஆண் தாபத்திற்கு ஒப்புக்கொடுத்ததன் தோல்வியை அறிவிப்பது. அது போன்ற தாப வெளிப்பாடு அல்ல அசின் பெண்பிம்பத்தின் கண்களில் தெரிவது. வாழ்க்கையின் துயரங்களை துயரங்களாக அனுபவத்தறியாத செல்லப்பிள்ளையின் கண்கள் அசின் பெண் பிம்பத்தின் கண்கள். அந்தக் கண்களே அசின் பிம்பத்தின் உடலசைவுகள் அனைத்தையும் கோலாகலமாய் மாற்றுகின்றன. உணர்வு தொற்றா கண்கள் அவை என்பதினால் அசின் பிம்பத்தை அம்பாளாகக் காண வேண்டிய துரதிருஷ்டம் நமக்கு நிகழாது என்று நான் ஆசுவாசமடைகிறேன். அழகிய பொம்மை உலா பொழுதுபோக்குக்கு உகந்ததுதானே.

கண்களின் உணர்வு தொற்றாதது நடிப்பின் குறைபாடு இல்லையா என்று ஒருவர் வினவலாம்தான். நிச்சயமாகக் குறைபாடுதான். நாடக இயக்குனரான என்னிடத்தில் அசின் பிம்பத்தைக் கொடுத்துவிடுங்கள் தட்டி கொட்டி சரி செய்து அனுப்புகிறேன் என்றுதான் சொல்லமுடியும்.


சாண்டில்யன் நாவல்களில் வரும் பெண்களின் பின்பாக வருணணைகள், எம்.ஜி.ஆர். பிம்பம் திரையில் கதாநாயகி பிம்பங்களைக் கட்டிப்பிடிக்கும் முறைகள் என்று கட்டமைக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படப் பார்வையாளனின் இன்ப வரலாற்றில் பெண் பிம்பங்களின் பின்பாகங்கள் வகிக்கும் முக்கிய  இடம் நாம் அறிந்ததே. மறைமுகமாகவே முன்பு தமிழ்த் திரைப்படங்களில் அவைச் சுட்டப்பட்டன; நம் சம காலத்திய திரைப்படங்களிலோ பெண் பிம்பங்களின் பின்பாகங்களில் ஆண் பிம்பங்கள் தட்டுவது, தாளமிடுவது, பாக்கெட்டுகளில் கைவிடுவது, இறுக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் சர்வ சாதாரணமாய் இடம்பெறுகின்றன. பெண்பிம்பங்கள் தங்கள் பின்பாகங்களை உயர்த்தி தூக்கிக்கொண்டு பக்கவாட்டிலோ, பின்னோக்கியோ ஓடும் நடனக் காட்சிகளும் ஏராளம். அசின் பெண் பிம்பத்திற்கும் இந்தத் தமிழ் பண்பாட்டு முத்திரை வெளிப்பாடுகளிலிருந்து விதி விலக்கில்லை.
இவ்வாறாக அசின் பெண் பிம்பம் பங்கேற்கும் காட்சிகள் புகழ்பெற்றவை என்று அறிகிறேன். ‘ஐல ஐலசா ஆரியமாலா’ என்ற பாடல் காட்சியில் அசின் பெண்பிம்பத்தின் உடலசைவுகளில் மிருகதாபம் ஏறியிருந்தது. அந்தப் படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். ஏனெனில் அந்தப் பாடலைப் பார்த்த நான் உடனடியாக அசின் பெண் பிம்பக்கவர்ச்சியிலிருந்து விடுபட்டுவிட்டேன்.


இருந்தாலும் பழைய விசுவாசம் போகுமா என்ன? அசின் பெண் பிம்பம் கழுத்தெலும்பு தெரிய கன்னம் ஒட்டி, செயற்கையாய் சிரித்து சிரித்து அமீர் கானுடன் ஹிந்தி கஜினிக்காக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தபொது மனமுடைந்துவிட்டேன். உடனே வீட்டுக்கு அழைத்து புதிதாய் சமைந்த பெண்ணுக்கு நம்மூரில் கொடுப்பது போல உளுந்தங்களி கிண்டிப்போட வேண்டுமென்று தோன்றியது.




Wednesday, November 9, 2011

அப்பாவின் எருமைமாடு





கோண்ட் பழங்குடி ஓவியம்/ ஓவியர்: ரமேஷ் தேக்கம்


ஊர் நிறைந்திருக்கும் எருமைமாடுகளில்
தன் சிகரெட்டைத் திருடிய
மாடு எதுவென்று
அப்பா அறிவார்


அப்பாவின் அந்த ஒரு மாட்டிற்குத்தான்
அப்பாவிற்கு இரு முறை
இதயம் நின்று மீண்டதும் தெரியும்
அப்பா புகைக்கக்கூடாதென்றும் தெரியும்


ஒடுங்கிய மார்புக்கூடோடு
பரபரக்கும் கைகளோடு
அப்பா சிகரெட்டைத் தேடும்போது
மாடு சிலசமயம்
திருடிய சிகரெட்டை நீட்டும்
பற்ற வைத்தும் கொடுக்கும்
அப்பாவின் சிரிக்கும் கண்களை
பேதமையோடு பார்த்து நிற்கும்


ஏன் என் சிகரெட்டைத் திருடினாயென
அப்பாவும் கேட்டதில்லை
எருமைமாடும் சொன்னதில்லை
எருமைமாடு சிகரெட் பிடிக்காதென்று
எல்லோருக்கும் தெரியும்தானே
ஆனாலும் அப்பா ஊரறியச் சொல்வார்
என் எருமை புகைக்காதென


உண்மையிலேயே எருமை புகைத்த தினத்தன்று
அப்பா எழுந்திருக்கவேயில்லை
அந்த சிகரெட் திருடியதில்லைதானே