Sunday, November 6, 2011

ஆச்சியை என்ன செய்ய?






மகாகாலனின் புனித உருவம் From http://www.tibetan-museum-society.org/tibetan-art-museum-gallery/exhibit.php?id=130&sortby=century

வெளியூருக்குச் செல்ல வேண்டும் எல்லோரும்
ஆச்சியை என்ன செய்ய என்றுதான்
இப்போது ஆலோசனைக் கூட்டம்.

ஆச்சி ஒரு முழமாய்
குறுகி விட்டாள்
சில பருக்கைச் சோறும்
சில துளி நீரும்
அவளுக்குப் போதும்

ஆனால் அவள் தூங்குவதேயில்லை
அவள் யாரையாவது கூப்பிட்டுக்கொண்டேயிருப்பாள்
அவர்களில்
சிலர் இருப்பவர்கள்
சிலர் இறந்தவர்கள்

ஆச்சிக்குக் கண்ணில் தெரியும் பேருரு
அவளை வா வா என்கிறது சதா
தன் சிறு கைத்தடியால் ஆச்சி
அந்தப் பேருருவை
நையப் புடைப்பாள்
காலால் எட்டி விரட்டுவாள்
ஆச்சியின் உதையில் 
தன் மண்டையோடு மாலைகள் குலுங்க 
பதறி ஓடும் அந்தப் பேருரு

அந்தப் பேருருவின் விஷமக் கண்களில் 
இப்போது கொண்டாட்டம்
ஆச்சி தனியாய் சிக்குவாள் என்று

எலி, பாச்சா, பூரானிடமிருந்து காப்பாற்ற
ஆச்சியைத் தூக்கி
மாடக்குழியில் வைத்தாயிற்று
வட்டிலில் சோறும்
கிண்ணத்தில் நீரும் கொடுத்தாயிற்று
பேருருவை விரட்ட
சீரோ வாட்ஸ் பல்பைப் போட்டாயிற்று
ஏகதேசம் எல்லாம் சௌக்கியம்

ஆச்சி முனகுவது 
எப்போதும்போல்
யாருக்கும்
கேட்கவில்லை

பேருருவை எட்டிச் சமட்டும்போது
மாடக்குழியிலிருந்து 
தலைகுப்புற தான் விழுவோமென
ஆச்சிக்கு மட்டுமே
தெரிந்திருந்தது.



3 comments:

Anonymous said...

Heart wrenching recount of my late grandma ! I could vividly recall her last days wearing a shirt because nothing else fits. Someone has to carry her to take bath etc, etc. Almost with no eyesight, half senile and words failing in mid sentence, what an existence ?

I looks like there is one such person in every house.

Anonymous said...

Mudhal Moondru varigalil thaniyaga kooda oru kavidhai tharunama thondriyathu

வரசித்தன் said...

இப்போது ஷெல்கள்
அருகாய்,
அண்ணாசிலையடியிலும் விழுந்து
வெடிக்கத்தொடங்கியிருந்தன.
சாத்தியமானதெல்லாம் சைக்கிளில்
வைத்துக் கட்டிவிட்டிருந்தேன்
மனைவி சின்னவளைத்தூக்கினாள்
நான் அம்மாவை தூக்கிக்கொண்டேன்.
...

சார்.

சிலகவிதைகள் மிதித்துப்பின் கால் எடுக்கவெடிக்கும் பொறிவெடிபோலவெடித்து சுவரெங்கும் இரத்தத்தைத் தெறிக்கின்றன.அங்கு நினைவுகள், கொண்டாட்டத்தோடு உடைக்கப்படும் பலூன்களில் இருந்து சொரியும் வண்ணச்சிதறல்கள் போல காற்றில் மினுங்கியபடியே மிதந்து கொண்டிருப்பதில்லை.ஊசிகளாய்ச்சிதறி காயம் தேடித்தேடித் தைக்கின்றன.
ஆனாலும் வலிகளை உயிர்ப்பித்து உயிர்ப்பித்து ஆற்றுவதன் மூலந்தான் வலிகளைக்கடக்கமுடியுமாமே.