Sunday, November 20, 2011

மாமா



உரித்த நேந்திரன் வாழைப்பழம்/still life/ டிஜிட்டல் ஓவியம்


‘யானைக்கால் பப்படம் உண்டாடே’ என்று கேட்டுக்கொண்டே உள் நுழைந்த மாமாவைப் பார்த்து வெலவெலத்துப் போனான் மு. மாமா பின்னாலேயே மட்டிப் பழம் ஒரு தார், செவ்வாழை ஒரு தார், நேந்திரன் பழ சிப்ஸ் இரண்டு கிலோ, நான்கு ஓலைப்பட்டி நிறைய கருப்பட்டி, ஆறு பாக்கெட் சக்கா பிரதமன் என்று ஒரு குட்டி நாகர்கோவிலே அவரைத் தொடர்ந்து உள் நுழைந்து மு வின் ஒற்றை அறை அப்பார்ட்மெண்டை நிறைத்தது. மாமாவின் மகள் வீட்டில் ஏராளமாய் உறவினர்களாம். கொஞ்சம் தனியாய் சடவாரலாமே என்று மு வீட்டிற்கு வந்தாராம். ஒரு வாரம் இருப்பாராம்.

மு அவசர அவசரமாய் படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் என்று டிவிட்டர் அறிவிப்பு வெளியிட்டு தோழிகள் வீட்டுக்கு வருவது எல்லாவற்றையும் ஒரு வாரம் தள்ளிப்போட்டான். மாமா, மு வுக்கு ஒண்ட சிறிதாய் இடம் கொடுத்துவிட்டு முழு வீட்டையும் ஆக்கிரமித்தார். மு வுக்கு மாமா சொந்த மாமா இல்லை; தாயாய் பிள்ளையாய் பழகிய கூட்டத்தினால் மாமா. மு மருமக்க வழி வெள்ளாளன் இல்லையே என்று மாமாவுக்கு பெரும் சிரிப்பு உண்டு. நேரடியாகவும் மறைமுகமாகவும் அதை இடித்துக் காட்டுவார். மு பேச்சிலர் பாயாக ப்ரெட்டும் ஜாமும் அவசர அவசரமாய் செய்து சாப்பிட்டுவிட்டு வேலைக்கு ஓடிக்கொண்டிருந்தது மாமாவிடம் ரத்தக் கண்ணீரை வரவழைத்தது. மாமாவுக்காக மு மாகி நூடுல்ஸ் விசேஷமாக செய்து போட்டபோது நம் ஊர்க்காரப் பயல் இப்படி நகரத்தில் வந்து கஷ்டப்படுகிறானே என்று அவருக்கு அனுதாபம் மிகுந்து விட்டது. 

மாமா பிரமாதமாக கதை சொல்லுவார். இலக்கியத்தில் எங்கெல்லாம் நாஞ்சில் நாட்டு வெள்ளாள உணவு வகைகள் குறிப்பிடப்படுகின்றன, என்று மாமா பேசுவதைக் கேட்க பெரும் கூட்டமே கூடும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மருமக்கள் வழி மான்மியம் நூலில் அவியல் பொரியல் தீயல் துவையல் என்று பாடியிருப்பதை மாமா மேற்கோள் காட்டி சாப்பாட்டு கதைகள் சொல்வதைக் கேட்க ஊரே கூடும். இங்கே நகரத்தில் மாமாவின் நாஞ்சில் நாட்டு சமையல் குறிப்பு இலக்கியத்தைக் கேட்க யாருமில்லை என்பதில் மாமாவுக்கு பெரிய மனக்குறை. மகள் வீட்டிலிருந்து தப்பி, மு வீட்டில் மாமா தங்குவது அதனால்தான். மு வைப் பிடித்து வைத்து சக்க பழ அல்வா செய்வது எப்படி, புளிசேரி மரச்ச்சீனி அப்பளம் இணைக்கு உகந்த வேறு இணையை சொல்ல முடியுமா என்றெல்லாம் கதை சொல்வார்; மு வுக்கு எச்சில் ஊறும், மனம் பதறும், ஊர் விட்டு வந்தோமே என்று கண் கலங்கும். மாமாவுக்கு மு கண் கலங்குவதைப் பார்த்து உற்சாகம் பீறிடும். நாஞ்சில் நாட்டு கல்யாணங்களில் தான் பந்தி விசாரித்த சம்பவங்களையும் அண்டா அண்டாவாக எரிசேரி, புளிசேரி என்று ஆக்குப்பறைகள் நிறைந்திருப்பதையும் மாமா மேலும் மேலும் விவரிப்பார். மு வின் கனவுகளெல்லாம் ஆக்குப்பறைகளாகிவிடும். அவன் சதா ஒரு சாம்பார் வாளியைத் தூக்கிக் கொண்டு நடப்பதான பிரேமை கொள்வான். மாமா ஒரு வாரம் தங்கியிருந்ததில் மூன்றாம் நாளே கண்ணுக்குத் தெரியாத சாம்பார் வாளி மு வின் கைக்கு வந்துவிட்டது. தன் மடிக்கணிணியைத் தூக்கிக் கொண்டு அலுவலகம் செல்வதுகூட சாம்பார் வாளியைத் தூக்கிக்கொண்டு பந்தி விசாரிக்கபோவது போல இருந்தது.

மு அலுவலகத்திற்கு சென்றிருக்கும்போது பொழுதுபோகாத நேரத்தில் மாமா மு வின் டிவிடி படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். சார்லி சாப்ளினின் கறுப்பு வெள்ளைப் படங்கள் மாமாவுக்கு மிகவும் பிடித்துப்போயின. முவின் மேல் அதனால் மாமாவுக்கு பிரியம் அதிகமானது. மு மாமாவுக்கு சாப்ளின் பிடித்தது எப்படி என்று சூசகமாக விசாரித்தான். சாப்ளின் படங்களில் எத்தனை காட்சிகளில் வண்டி வண்டியாய் ஐஸ்கிரீமும் மேற்கத்திய உணவுப்பண்டங்களும் வருகின்றன என்று மாமா ஆர்வமாய் கணக்கு சொன்னார்.

முவுக்கு உபவாசம் இருந்துவிடலாமா என்னும் அளவுக்கு மனம் முழுக்க நாஞ்சில் நாட்டு ஆக்குப்பறைகளாகிவிட்டன. உரித்த நேந்திரன் பழம் ஒன்றினை சாப்பிடாமல் வேண்டாத நாவலை குப்பைக் கூடையில் போடுவதைப் போல நான்காம் நாள் காலையில் தூக்கிப்போட்டான். அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தால்கூட மாமா காத்திருந்து கதை சொன்னார்.

மாமாவின் கதைகளிலிருந்து தப்பிப்பதற்கே மு மாமாவை பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் அறிமுகம் செய்து வைத்தான். குழந்தைகள் சனிக் கிழமை மாலை தோறும் மொட்டைமாடியில் ஏதாவது நடனமாடிக்கொண்டிருந்தனர். மாமாவுக்கு அந்த வார நடனத்தில் பங்குபெற அழைப்பு வந்தது. மாமா உற்சாகமாக குழந்தைகளோடு ஐக்கியமாகிவிட்டார். அந்த வாரம் காண்வெண்ட் டான்ஸ். எல்லோரும்  ஆளுக்கொரு குடையை கையில் வைத்துக்கொண்டு ஒன் டூ த்ரீ என்று மூன்று எட்டு முன்னால் வர வேண்டும் குடையை விரிக்கவேண்டும். அடுத்த ஒன் டூ த்ரீ யில் பின்னால் மூன்று எட்டு போய் பக்கவாட்டில் குடையை விரித்து காட்டவேண்டும். குடை இல்லாத கை இடுப்பில் ஊன்றியிருப்பது அவசியம். 

மாமா மொட்டைமாடி காண்வெண்ட் டான்சில் பங்கேற்றது களேபரமாயிருந்தது. மாமா பரத நாட்டிய கலைஞர் போல இடுப்பில் கையை ஊன்றியிருந்தார். மறு கையில் அரையாள் நீளமுள்ள மான் மார்க் குடை. குழந்தைகள் சுற்றி நின்று கோரசாக ஒன் டூ த்ரீ க்கு பதிலாக எரிசேரி புளிசேரி துவையல் என்று பாட மாமாவும் பாடிக்கொண்டே மூன்று எட்டு முன் வந்து குடையை விரித்து காண்பித்தார். அவியல் பொரியல் பப்படம் என்று குழந்தைகள் பாடியபோது பின்னால் மூன்று எட்டு போய் இடது பக்கவாட்டில் குடைவிரிப்பு. மீண்டும் எரிசேரி புளிசேரி துவையலுக்கு முன் நோக்கி நடை குடை விரிப்பு. கிச்சடி பச்சடி பழங்கறிக்கு பின்னால் மூன்று எட்டு போய் வலது பக்கவாட்டில் குடை விரிப்பு. பப்படம் பிரதமன் பாயாசம் என்ற வரிக்கு மூடிய குடையை மாமா தலைக்குமேல் வேலுத்தம்பி தளவாய் சுருள் வாளை சுழற்றியது போல சுழற்றி முன்னால் தரையில் ஊன்றி கிங்கரன் போல் போஸ் கொடுத்தார். மு விற்கு மொட்டைமாடியே ஆக்குப்பறையாகிவிட்டது போல இருந்தது. குழந்தைகள் ஒவ்வொன்றும் குட்டி அண்டா போல தோன்றின. ஆனால் குழந்தைகளிடையே மாமா மிகவும் புகழ் பெற்றவராகிவிட்டார்.

முவை சந்திக்க நேரும்போதெல்லாம் இப்போது குழந்தைகள் உங்கள் மாமா எப்போது திரும்ப வருவார் என்று கேட்கின்றனர். 

5 comments:

Anonymous said...

எரிசேரி, புளிசேரி....ஹ்ம்ம்...வடசேரி, ஒழுகினசேரி எல்லாம் சுற்றிய தினங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன...தில்லியில் ரசவடை எங்கு கிடைக்கும்?

Anonymous said...

நாஞ்சில் நாடன் கதைகளுக்கான இலக்கிய விமர்சனம்?:)- சுந்தர்

Anonymous said...

நாஞ்சில் நாடன் கதைகளை இப்படி மொட்டை மாடியில் குடை டான்ஸ் ஆட விட்டுவிட்டீர்களே! -ரங்கராஜன்

mdmuthukumaraswamy said...

மறுமொழியிட்ட நண்பர்கள் நாஞ்சில் நாடன் கதைகளின் விமர்சனமாக இந்தப் பதிவை வாசிப்பதை அறிந்து நான் ஆச்சரியமே அடைகிறேன். எழுதிய எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை.

பேயோன் said...

சிண்டு முடிவதும் சிண்டு முடியப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்து புளகித்து தூபம் போடுவதும் நமது வழக்கமாயிற்றே. இணையத்தில் எல்லா எழுத்தும் வம்பு எழுத்தாக சித்தரிக்கப்படும் போலும். இதற்கெல்லாம் பதிலளித்து மாளாது.