நாங்கள் சிந்துபூந்துறையில் இருந்தபோது பொன்னுசாமி பக்கத்து தெருவில் இருந்தார். நாங்கள் தியாகராஜ நகருக்கு குடி பெயர்ந்தபோது அங்கே பக்கத்து தெருவிற்கு அவர் ஏற்கனவே குடி வந்திருந்தார். தியாகராஜ நகரிலிருந்து வியர்க்க விறுவிறுக்க பொன்னுசாமி என்னைப் பார்க்க சிந்துபூந்துறைக்கு வருகிற சிரமம் இனி அவருக்கு இல்லை என்றேன். ஆனாலும் அவரை ஒரு தொந்திரவாகவே ஆரம்பத்தில் நினைத்தேன். எப்பொழுது வரும்போதும் பிளாஸ்டிக் கூடைப்பை ஒன்றில் அவருடைய கவிதைகளை குயர் கணக்கில் கொண்டு வருவார். என்னுடைய மன நிலை என்ன என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் கவிதைகளைப் படித்து உடனடியாக கருத்து சொன்னால்தான் ஆயிற்று என்று அடம்பிடிப்பார். வீட்டில் அம்மா, அப்பா, ஆச்சி என்று பெரியவர்கள் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் பீடி பத்தவைத்தபடி என்னுடைய கருத்துக்காக பதற்றத்துடன் இருப்பார். மூன்று கவிதை தாண்டுவதற்குள் அறையை பீடிப்புகை நிறைக்கும். அவர் தன்னை தீவிர இடதுசாரியாக கணித்திருந்ததால் அவருடைய கவிதைகள் எல்லாமே வெளிப்படையான கோஷங்களாக இருக்கும். எனக்கு அவை கவிதைகளாகப்படவில்லை என்பது நான் வாயைத்திறப்பதற்கு முன்பே அவருக்குத் தெரிந்துவிடும்; நான்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி ஆயிற்றே எனக்கு எப்படி அவரின் கவிதைகள் பிடிக்க முடியும்? நமுட்டுப் புன்னகையுடன், பெரிய மீசையை முறுக்கிவிட்டபடி, வியர்வை ஆறாமல், என் கருத்துக்காக காத்திருப்பார். நானும் அவரை ஏமாற்றியதே இல்லை. தயவு தாட்சண்யமில்லாமல் அவருடைய கவிதைகள் குப்பை என்று நிரூபிப்பேன். பதற்றமாகவே வீட்டுக்குக் கிளம்பிப்போவார்.
பல நாட்களாக பொன்னுசாமி என்னைப் பார்க்க வராமல் இருந்ததால் மனம் அவரைத் தேடிற்று. முதல் முறையாக நான் அவரைத் தேடி அவர் வீட்டுக்குப் போனேன். அன்றுதான் எனக்கு அவருக்கு மணமாகி நான்கு வயதில் மகனிருப்பதும், அவர் வயதான அப்பா, அம்மாவுடன் இருப்பதும் தெரியவந்தது. உற்சாகமாக வரவேற்றார். சம்பளமில்லா விடுப்பு எடுத்துக்கொண்டு மூன்று வாரங்களுக்கு மேலாய் கவிதை எழுதிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். வீடு முழுக்க மவுனமான பதற்றம் பரவியிருந்தது. வேலைக்குப் போய் சம்பாதிக்காவிட்டால் மனைவி அவள் அம்மா வீட்டுக்கு போய்விடப்போவதாய் தன்னை மிரட்டுவதாகச் சொன்னார். அவர் அப்பாவின் கண்களில் அவருக்கு கவிதை லபிக்க வேண்டுமே என்ற கவலை நிரம்பியிருந்தது.
பொன்னுசாமி அன்றைக்கு அவருடைய அறையில் உட்கார்ந்திருந்த விதம் இன்றைக்கும், சுமார் பதினாறு வருடங்களுக்குப் பிறகும், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பிளாஸ்டிக் கூடை சேரில் அவர் உட்கார்ந்திருக்க, அறை முழுக்க புல் ஸ்கேப் தாள்கள் சரமாரியாய் கிடந்தன. அவர் முழு வெள்ளைத் தாளில் மூன்று அல்லது நாலு வரி கொள்ளும்படி குண்டு குண்டாய் எழுதுவார். நிறைய பக்கங்களை குறைவான காலத்தில் எழுதிவிடவேண்டும் என்ற எல்லா தமிழ் எழுத்தாளர்களின் ஆதங்கம் அவருக்கும் இருந்தது. மூன்று வாரவிடுப்பில் ஆறாயிரம் பக்கங்கள் எழுதியிருந்தார். எங்கே அவ்வளவையும் படித்து கருத்து சொல்ல வேண்டுமோ என்று நான் கலவரமடைந்தேன்.
என் வீடு துர் மரணங்களினால் நிரம்பி, நான் தன்னந்தனியாக, மனப்பிரேமையுற்று ஆச்சியுடன் தியாகராஜ நகர் வீட்டில் இருந்தபோது என்னைப் பார்க்க வரும் ஒரே நபராக பொன்னுசாமி மட்டுமே இருந்தார். அப்பொழுது அவருடைய பிளாஸ்டிக் கூடையில் கவிதை தாள்களுடன் எனக்காக அவர் வீட்டிலிருந்து கொண்டுவரும் பலகாரங்களும் இருக்கும். அவருடன் சேர்ந்து பீடி புகைப்பேன். வீட்டிற்குள்ளேயே அடைந்திருக்காதீர்கள் என்று என்னை வெளியே வாக்கிங் கூட்டிபோவார். வழக்கம்போல் என்னுடைய அப்போதைய நிலைமையிலும் அவர் அவருடைய கவிதைகளைப் பற்றிய எனது அபிப்பிராயங்களைக் கேட்கத் தவறவும் இல்லை நானும் அவர் கவிதைகளை அங்கீகரித்து ஒரு வார்த்தை சொல்லவும் இல்லை.
ஆகப் பெரிய கவிதையை எழுதியே தீர வேண்டும், அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம், என்ன பிரயத்தனம் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பொன்னுசாமியின் அணுகுமுறை எனக்கு நியாயமானதாகவே பட்டது. ஆனால் கவிதை வரவேண்டுமே அதற்கு என்ன செய்வது? என் அளவுகோல்களின்படி என்றில்லாமல் அவருடைய அளவுகோல்களையே எட்ட முடியாமல் அவர் கீழே விழுந்துகொண்டேயிருந்தார். என்னுடைய அவரைப் பற்றிய மனப்பிம்பமே என்னுடைய நிலைமையாய் அடுத்த பதினாறு வருடங்களுக்கு ஆகப்போகிறது என்று எனக்கு அப்போது தெரி்ந்திருக்கவில்லை.
ஒரு வரி கூட எழுத சித்திக்காமல் வெற்றுத்தாளையும், வெற்று கம்ப்யூட்டர் ஸ்க்ரீனையும் பார்த்துகொண்டே பதினாறு வருடங்களை கழித்திருக்கும் எனக்கு பொன்னுசாமியின் அவஸ்தை புரிகிறது. அல்லது புரிய ஆரம்பித்திருக்கிறது.
ஊர் மறந்து, சுற்றம் மறுத்து சென்னைக்கு இடம் மாறியபின், பல வருடங்களுக்குப் பின் பொன்னுசாமியைப் பார்க்க தியாகராஜ நகருக்குப் போனேன். தொடர்பு அறுந்திருந்தது. அவர் முழுமையான பைத்தியமாக மாறி ஓடிப் போய்விட்டதாகவும் மற்றவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு கிராமத்திற்குப் போய்விட்டதாகவும் சொன்னார்கள்.
நான் என்னை எப்படியாவது மீட்டெடுத்து எழுதியே தீருவது என்றிருக்கிறேன்.
1 comment:
Wish you good luck.
Post a Comment