Sunday, September 5, 2010

காதலின் தருணங்கள்

அவர்கள் உலகப்புகழ் பெற்ற நாட்டுப்புறவியலாளரின் வகுப்பில் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் அவர்களனைவரையும் ஒவ்வொருவராக அவர்கள் முதல் பல் விழுந்தபோது என்ன செய்தார்களென்று சொல்லச் சொல்லியிருந்தார். சாணியுருண்டையில் பொதிந்து கூரையின் மேல் தூக்கிப்போட்டதை சொல்ல வெட்கப்பட்டு அவன் தனக்கு நினைவில்லை என்று பொய் சொன்னான். அவனுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த அவள் தங்கள் நாட்டில் முதல் பல் விழுந்தவுடன் குழந்தைகள் எலி வளையின் வாயிலில் விழுந்த பல்லை வைத்து ஒரு பழம் பாடலை பாடுவார்களென்றும் தானும் அதையே செய்ததாகவும் சொல்லி அவள் அந்த பாடலை பாடியும் காண்பித்தாள். பல வருடங்களுக்குப் பிறகு, அவள் அன்றைக்கு “எலியே, எலியே” என்று புரியாத அன்னிய மொழியில் பாடிய தருணத்திலேயே தான் அவளிடத்தில் காதல் வசப்பட்டான் என்று அவன் நினைவுகூர்ந்தான். முடிக்கற்றைகள் முகத்தில் விழ குழந்தைமையும் குதூகலமும் அவளிடத்தில் நிறைந்திருந்த கணம் அது.

அவர்கள் மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள்; அவள் கழுத்தில் பாய் ஸ்கவுட்ஸ் அணிவது போல சிகப்பு கைக்குட்டையை அவள் கட்டியிருந்தது அவனை பாடாய் படுத்திக்கொண்டிருந்தது. வெள்ளை பேண்ட்டுக்கும் வெள்ளை கோட்டுக்கும் அது அழகூட்டியது மட்டுமில்லாமல் அவள் கழுத்தைத் திருப்பும்போதெல்லாம் அந்த கைக்குட்டை அவளை மேலும் மேலும் ஒயிலாக்கிக்கொண்டிருப்பதாக அவன் நினைத்தான். அவள் எதிர்பார்க்காத கணத்தில் மெலிதாக முத்தமிட்டான். முகம் சிவந்து நின்றவளிடத்தில் பூரிப்பு இருந்தது. அதன் பிறகு இருவரும் கைகோர்த்தபடி தங்கள் தாய் மொழிகளில் சிறு சிறு பாடல் வரிகளை முணுமுணுத்தபடியே சென்றனர்.

மலையிலிருந்து இறங்கிய வேனில் அவர்கள் இருவரும் அருகருகே உட்கார்ந்திருந்தனர். அவள் இயல்பாக அவனை தன்னருகே இழுத்து காதில் ரகசியம் சொன்னாள். வேனே பரபரத்தது; அவர்களிடையே உடலுறவு ஏற்பட்டுவிட்டதாக கிசுகிசுத்தது; அதுவே பின்னர் ஊர்க்கதையாயிற்று.

அவர்களிடையே வேறுபாடுகள் கனத்துக்கொண்டிருந்தன; பல நூறு கடிதங்களை அவர்கள் பரிமாறிக்கொண்டிருந்தபோதும், பல முறை சந்தித்துகொண்ட பிறகும், ஊரே அவர்களை காதலர்கள் என்று புறம்பேசியபோதும், அவர்கள் தங்களுக்குள் எதையும் அறிவித்துக்கொள்ளவில்லை. அவளை அவன் பெரு நகரத்திற்கான பஸ்ஸில் ஏற்றி வழி அனுப்பி வைக்க வந்தபோது, அவள் பஸ்ஸில் ஏறியபின், தூரத்து மறைவிலிருந்து அவள் தன்னை கண்களால் தேடுகிறாளா என்று வேவு பார்த்தான்.

பிரிவுக்கு பின், கடிதங்கள் குறைந்து படிப்படியாய் நின்றே போய்விட்டது. அவளுடைய தோழி திடீரென அவனை பார்க்க வந்தபோது அவர்கள் உறவு கற்பனை அல்ல என்று நம்பத் தொடங்கினான். ஆனால் அவர்கள் மீண்டும் சந்தித்தபோது அவர்கள் வேறு வேறு நபர்களாகியிருந்தனர்.

தோழியிடமிருந்து அந்த மின்னஞ்சல் வந்தது: அவனுக்கு அந்த செய்தியை தெரிவிக்க தாமதமாகிவிட்டதாம், பல மாதங்கள் கடந்துவிட்டதாம். ஒரு வெள்ளி இரவொன்று தன் அபார்ட்மெண்டுக்கு திரும்பிய அவள் மீண்டும் எழுந்திருக்கவே இல்லையாம். அவன் அவளுடைய புகைப்படங்கள் கிடைக்குமா என்று கேட்டு எழுதினான். மற்றபடி நிச்சலனமாயிருந்தான். தினசரி அரை லிட்டர் வோட்கா குடித்தால் இப்படிதான் ஆகும் தினசரி ஐம்பது சிகரெட் குடித்தால் வேறெப்படி ஆகும் என்று அவ்வபோது அவளை மனதிற்குள் திட்டுவான். அவளுடைய விரல்கள் அவளுடைய உடலுக்கு பொருத்தமில்லாமல் சின்னதாக இருக்கும் என்று ஒரு நாள் நினைவு வந்தபோது ஊரையே நிறைக்கும் கேவலுடன் மனமுடைந்து அழுதான்.

No comments: